உள்ளூர் செய்திகள்

பிரசவத்தின்போது கர்ப்பிணி உயிரிழப்பு- தவறான சிகிச்சையால் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியல்

Published On 2023-05-24 05:29 GMT   |   Update On 2023-05-24 05:29 GMT
  • இந்திராதேவி இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை டாக்டர்கள் தெரிவிக்கும்வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.
  • இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செங்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராமன்(24). இவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இந்திராதேவி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கருவுற்றிருந்த இந்திராதேவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நேற்று மாலை அவருக்கு சிசேரியன் மூலம் ஆண்குழந்தை பிறந்தது. அதன்பிறகு இந்திராதேவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இரவு தனது மகளை பார்ப்பதற்காக இந்திராதேவியின் தாய் சென்றுள்ளார். தனது மகளின் உடலை தொட்டு பார்த்தபோது ஐஸ்கட்டி போல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இன்றுகாலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரசவத்தின்போதே தவறான சிகிச்சையால் இந்திராதேவி இறந்துவிட்டதாகவும், ஆனால் தங்களிடம் இதுபற்றி தெரிவிக்காமல் டாக்டர்கள் மறைத்துவிட்டனர் எனக்கூறி அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்திராதேவி இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை டாக்டர்கள் தெரிவிக்கும்வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே வருமாறு அறிவுறுத்தினர். இதனிடையே இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கேயும் பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பதட்டமான சூழல் உருவானது.

Tags:    

Similar News