குடியரசு தினவிழா- பவானி நகராட்சி துணைத்தலைவர் திடீர் ஆர்ப்பாட்டம்
- நகர் மன்றத்தின் துணைத்தலைவர் மணி நகராட்சி நுழைவாயில் முன்பாக நின்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
- பலமுறை நான் பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
பவானி:
பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று காலை குடியரசு தினவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. ஆணையாளர் மோகன்குமார் முன்னிலையில், நகர் மன்ற தலைவர் சிந்தூரி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் நகராட்சி வளாகத்துக்கு வருகை தந்த நகர் மன்றத்தின் துணைத்தலைவர் மணி நகராட்சி நுழைவாயில் முன்பாக நின்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
நான் நகர் மன்ற துணைத்தலைவராக பதவி வைத்து வருகிறேன். எனக்கு இதுவரை நகராட்சி நிர்வாகத்தினர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முறையாக அழைப்பு விடுத்ததே கிடையாது. பலமுறை நான் பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆகையால் இன்று குடியரசு தினத்தில் எனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டேன்.
இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், தலைவர் சிந்தூரி மற்றும் கவுன்சிலர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மணியை சமரச பேச்சு வார்த்தைக்கு அழைத்து சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டார்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.