உள்ளூர் செய்திகள்

காவலர் அங்காடியில் ரூ. 40 லட்சம் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர், 3 பெண் போலீசார் கைது

Published On 2022-08-13 08:32 GMT   |   Update On 2022-08-13 08:32 GMT
  • ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி, பெண் போலீஸ் ஏட்டு வீரம்மாள், போலீஸ்காரர்கள் கோகிலாவாணி, வளர்மதி மற்றும் மனோஸ்ரீ ஆகிய 5 போலீஸ்காரர்களும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
  • சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி, ஏட்டு வீரம்மாள், போலீசார் கோகிலாவாணி, வளர்மதி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மனோஸ்ரீ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சை ஆயுதப்படை மைதானம் அருகே காவலர் நல பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடியில் போலீஸ்காரர்களுக்கு அனைத்து விதமான பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும்.

அவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்துக் கொண்டு பொருட்கள் வாங்கலாம். இந்த அங்காடியில் போலீஸ்காரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் காவலர் அங்காடியில் கணக்கு வழக்கு சரிபார்க்கப்பட்டது. அப்போது சில பொருட்கள் குறைந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய ஆய்வில் ரூ.40 லட்சம் அளவில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொ) கவிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதில் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி, பெண் போலீஸ் ஏட்டு வீரம்மாள், போலீஸ்காரர்கள் கோகிலாவாணி, வளர்மதி மற்றும் மனோஸ்ரீ ஆகிய 5 போலீஸ்காரர்களும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி, ஏட்டு வீரம்மாள், போலீசார் கோகிலாவாணி, வளர்மதி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மனோஸ்ரீ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

முறைகேட்டில் ஈடுபட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்ட 3 பெண் போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News