உள்ளூர் செய்திகள் (District)

காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்விற்கான பயிற்சி கையேடு வழங்கும்விழா: சப்-கலெக்டர் வழங்கினார்

Published On 2023-01-14 06:56 GMT   |   Update On 2023-01-14 06:56 GMT
  • முன்பெல்லாம் போட்டித் தேர்வர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை.
  • உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பலரும் கஷ்டப்படாமல் முன்னுக்கு வந்து விடவில்லை.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 முதல்நிலைத் தேர்வில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக பயின்று 69 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இவர்களுக்கு முதன்மைத் தேர்விற்கான பயிற்சிக்கையேடு வழங்கும் விழா நடந்தது. வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநர் ஆர்.அருணகிரி தலைமை தாங்கினார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நிர்மலாதேவி, பயிற்சியாளர்கள் ஏ.பொன்வேல், எம்.புவனேசுவரி, என்.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக உதவியாளர் எம்.அசோக் வரவேற்று பேசினார். விழாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளரும், சப்-கலெக்டருமான புண்ணியகோட்டி பயிற்சிக்கையேடுகளை வழங்கி பேசியதாவது:-

முன்பெல்லாம் போட்டித் தேர்வர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. ஆனால் இப்போது வேலைவாய்ப்பு அலுவலகமே அனைத்தையும் இலவசமாக கற்றுத் தந்து பலருக்கும் அரசு வேலை பெற்றுத்தருவது பாராட்டுக் குரியது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்விலும் வெற்றி பெறுவதோடு நின்று விடாமல் தொடர்ந்து ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள்.விடாமுயற்சியே பலரின் வாழ்க்கையில் வெற்றியின் ரகசியமாக இருந்திருக்கிறது. உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பலரும் கஷ்டப்படாமல் முன்னுக்கு வந்து விடவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News