உள்ளூர் செய்திகள்

சமூக நீதி தேவை என்பதற்காகவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2023-07-05 08:53 GMT   |   Update On 2023-07-05 08:53 GMT
  • கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதை பொறுத்து மேகதாது அணை பிரச்சினை குறித்து இங்கு உள்ளவர்கள் பேசுகிறார்கள்.
  • முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் சில குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவர் கூறுவது போல எதுவும் இல்லை.

நெல்லை:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே அரிகேசவநல்லூரில் உள்ள அரியநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நெல்லை வந்தார்.

அவருக்கு வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் மாநகர காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே சமூக நீதி. பல்வேறு மதங்கள் உள்ள இந்த நாட்டில் சமூக நீதி தேவை என்பதற்காகவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இந்த சட்டமானது ஒரு சமூகத்திற்கு எதிரான சட்டம் என சிலரால் தோற்றுவிக்கப்படுகிறது. ஒரு வீட்டில் 4 நபர்கள் இருந்தால் தனித்தனியாக அவர்களுக்கு சட்டம் இருக்க முடியாது. அதனாலேயே அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். சரத் பவார் போன்றோர் கூட இந்த சட்டத்தை விமர்சனம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர். இந்த கால கட்டத்திற்கு இந்த சட்டம் அவசியமானது. எல்லோரும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ள முத்தலாக் சட்டத்தை கூட சிலர் அரசியல் ஆக்கி வருகின்றனர். ஆன்மீகம் இந்தியாவை வளர்க்கிறது. ஆன்மீகம் என்பதில் அனைத்து மதமும் அடங்கும். எல்லா மத நம்பிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதை பொறுத்து மேகதாது அணை பிரச்சினை குறித்து இங்கு உள்ளவர்கள் பேசுகிறார்கள்.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி குறித்து பேசி வரும் நிலையில் மகாராஷ்டிராவில் 40 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறிய சம்பவம் முற்றிலும் அரசியல் சார்ந்த கேள்வி. எனவே இது குறித்து நான் பதில் அளிக்க முடியாது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் என்ற பொறுப்பில் இருக்கும் எனக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளது. அதற்கு உட்பட்டு நான் செயல்படுகிறேன். முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் சில குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவர் கூறுவது போல எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகிக் கொண்டே தான் இருக்கிறது என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

முன்னதாக அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் கோரிக்கை ஒன்றை நான் பார்த்தேன். அதில் ஒரு மதம் சார்ந்த திருவிழாவிற்கு, அதிக பஸ் மற்றும் ரெயில்களை விட வேண்டும் என்று கோரிக்கை விட்டிருந்தார். ஒருவேளை என் கண்ணில் அது மட்டும் தான் பட்டதா என்று தெரியவில்லை. இங்கு திருச்செந்தூர் உள்பட ஏராளமான வழிபாட்டு தலங்கள் உள்ளது. அவர் எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் கோரிக்கை விட்டிருந்தால் அது மகிழ்ச்சி.

ஒருவேளை அவர் அப்படி அனைத்து மதத்தினருக்கும் சேர்த்து கோரிக்கை விடாமல் விட்டிருந்தால் ஏற்றத்தாழ்வு பாரபட்சம் இருக்கக் கூடாது. தமிழகத்தில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களையோ, விழாக்களையோ பேசுவதே தவறு என்ற எண்ணம் இருக்க கூடாது. முதல்வரே இந்து மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது. ஆக, இந்த பாரபட்சம் இல்லாத ஆன்மீக நிலை இருக்க வேண்டும்.

செய்தித்தாள்களில் வந்த வேடிக்கையான செய்தியை பார்த்தேன். கஞ்சாவை இளைஞர்கள் சாப்பிட்டு பார்த்து இருக்கிறோம். இப்போது தமிழகத்தில் கஞ்சாவை எலிகள் சாப்பிட தொடங்கி இருப்பதாகவும், கஞ்சாவை தேடி போலீஸ் நிலையத்திற்கு வரும் எலிகளின் போதையை தடுப்பது எப்படி என்றும், போலீஸ் நிலையத்தில் இருக்கும் கஞ்சாவுக்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது... எலிகளின் போதையை எப்படி தடுப்பது என்ற ஒரு பெரிய பிரச்சினை தமிழகத்தில் ஓடிக்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News