உள்ளூர் செய்திகள்

திருமங்கலத்தில் மோதல்: நகராட்சி தலைவி கணவர்-தி.மு.க. கவுன்சிலர் உள்பட 4 பேருக்கு கத்திக்குத்து

Published On 2022-07-20 06:27 GMT   |   Update On 2022-07-20 06:27 GMT
  • திருமங்கலம் என்.ஜி.ஓ. நகருக்கு செல்லக்கூடிய பாதையில் உள்ள பாலத்தின் வழியாக திருக்குமாரின் கார் டிரைவர் செந்தில் நேற்று இரவு காரை ஓட்டிச்சென்றார்.
  • அப்போது அங்கு நின்ற ஒரு கும்பல் காரை வழிமறித்து அவருடன் தகராறு செய்தது.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தலைவியாக இருப்பவர் தி.மு.க.வை சேர்ந்த ரம்யா. இவரது கணவர் முத்துக்குமார். அவரது சகோதரர் திருக்குமார் 5-வது கவுன்சிலராக உள்ளார்.

இந்த நிலையில் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகருக்கு செல்லக்கூடிய பாதையில் உள்ள பாலத்தின் வழியாக திருக்குமாரின் கார் டிரைவர் செந்தில் நேற்று இரவு காரை ஓட்டிச்சென்றார். அப்போது அங்கு நின்ற ஒரு கும்பல் காரை வழிமறித்து அவருடன் தகராறு செய்தது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் ரம்யாவின் கணவர் முத்துக்குமார், அவரது சகோதரர் திருக்குமார் ஆகியோரிடம் டிரைவர் செந்தில் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் தி.மு.க. நிர்வாகிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று தகராறு செய்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.

பின்பு முத்துக்குமார், திருக்குமார் உள்ளிட்டோர் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் திருமங்கலம் பகுதியை சேர்ந்த முகேஷ், ராஜேஷ், தினேஷ், மாரிமுத்து மற்றும் சிலர் அங்கு காரில் வந்தனர். அவர்கள் முத்துகுமார் மீது காரால் மோதினர்.

இதில் தூக்கி வீசப்பட்டு அவர் காயம் அடைந்தார். இதை தொடர்ந்த முத்துகுமார் தரப்பினருக்கும், காரில் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காரில் வந்த முகேஷ் உள்ளிட்டோர் தி.மு.க. நிர்வாகி சேட் அப்துல்லா, கவுன்சிலர் திருக்குமார், நகராட்சி தலைவியின் கணவர் முத்துகுமார், ஜெகன் ஆகிய 4 பேரையும் கத்தியால் குத்தினர்.

காயமடைந்த 4 பேரும் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த சேட் அப்துல்லா மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் முகேஷ், ராஜேஷ், தினேஷ், மாரிமுத்து உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அவர்களில் ரமேஷ் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். முகேஷின் தந்தை ராமர் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த மோதல் தொடர்பாக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் முகேசும் புகார் கூறியுள்ளார். தன்னை வழிமறித்து தாக்கி, வீட்டின் முன் நிறுத்தி இருந்த தனது காரை தீ வைத்து எரித்ததாக அவர் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் முத்துக்குமார், திருக்குமார் தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Tags:    

Similar News