உள்ளூர் செய்திகள்

2-வது நாளாக மகளிர் உரிமைத் தொகை கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் குவிந்தனர்

Published On 2023-09-20 08:55 GMT   |   Update On 2023-09-20 08:55 GMT
  • பலர் புதிதாக மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்தனர்.
  • ஏராளமானோர் ஒரே நேரத்தில் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 77 ஆயிரத்து 801 பேர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் செய்து இருந்தனர்.

இதில் 2,170 பேருக்கு முதல் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. பெரும்பாலானோரின் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த விண்ணப்பித்து இருந்த குடும்ப தலைவிகள் ஏராமானோர் நேற்று திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு விபரங்களை கேட்டறிந்தனர். பலர் புதிதாக மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் 2-வது நாளாக திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்று அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஏராளமானோர் ஒரே நேரத்தில் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. பெண்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து செல்ல முயன்றனர்.

தகவல் அறிந்ததும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நெரிசலை சரி செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து மீண்டும் உரிமைத்தொகை மனு பெற்று அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பெண்கள் வந்து கொண்டே இருப்பதால் வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News