உள்ளூர் செய்திகள் (District)

கோயம்பேடு உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து நாளை முதல் 10,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2022-10-20 07:58 GMT   |   Update On 2022-10-20 07:58 GMT
  • கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுக்கு பின்னர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் திட்டமிட்டு உள்ளனர்.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ரெயில், பஸ்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு முன்பு 2 நாட்கள் வார விடுமுறை நாட்கள் ஆகும். இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் பெரும்பாலானவர்கள் நாளை(21-ந் தேதி) முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சிறப்பு ரெயில்கள் உட்பட தென் மாவட்டங்கள் உட்பட முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் இருக்கைகள் விற்று தீர்ந்துவிட்டது. காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கையும் நீண்டு கொண்டே செல்கிறது.

தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பலர் அரசு பஸ்களில் பயணம் செய்வதையே தற்போது அதிகளவில் விரும்புகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை(21-ந்தேதி) முதல் வருகிற 23-ந் தேதி வரை 3நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 6300 பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக 4218 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 10,518 பஸ்கள் இயக்கப்படும் என்று கடந்த 10-ந் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்து இருந்தார்.

அதன்படி பஸ்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது. நாளை அதிகாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் பஸ் நிலையம், கே.கே நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் பணிமனை ஆகிய 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1437 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நாளை மறுநாள்(22-ந் தேதி) வழக்கமான பஸ்களுடன் 1586 சிறப்பு பஸ்களும் 23-ந் தேதி வழக்கமான பஸ்களுடன் 1,195 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட இருக்கிறது.

மேலும் இந்த 6 பஸ் நிலையங்களுக்கும் சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து பயணிகள் நெரிசலில் சிக்கி கொள்ளாமல் எளிதாக சென்றிட வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 24மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது. அதேபோல் உதவி மையம் மூலம் எந்தெந்த பிளாட்பாரத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பஸ்கள் புறப்படும் என்பதும் ஒலி பெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்பட உள்ளது.

நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் தாம்பரம், பெருங்களத்தூர் இடையே வழக்கமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுத்திடும் வகையில் போக்குவரத்து போலீஸ் சார்பாக சில மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு மார்க்கெட் எதிரே இ-சாலையில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் பஸ்கள் அனைத்தும் பி- சாலை வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று பின்னர் அங்கிருந்து வெளிவட்ட சாலை (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து கோயம்பேடு நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக அம்பத்தூர் நோக்கி திரும்பி சென்று அவரவர் அடைய வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும். தனியார் கார் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் வெளியூர் செல்பவர்கள் ஈ.சி.ஆர் மற்றும் ஒ.எம்.ஆர் சாலையை பயன்படுத்தி செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாக சென்று என்.எச் 45 சாலை செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுக்கு பின்னர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் திட்டமிட்டு உள்ளனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ரெயில், பஸ்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல் ரெயில், ஆம்னி பஸ்கள், அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு முழுவதும் முடிவடைந்து உள்ளன.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும் சுமார் 60 ரெயில்களில் 2.2 லட்சம் பேர் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்து உள்ளனர். இந்த ரெயில்களில் 35 ஆயிரம் பேர் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய உள்ளனர். ஏற்கனவே வருகிற செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரெயில்களில் முன்பதிவு முழுவதும் முடிந்து விட்டன. ரெயில்கள் தேவை அதிகரித்து உள்ளதால் திருநெல்வேலி, தஞ்சாவூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News