உள்ளூர் செய்திகள்

பர்கூர்-மைசூர் சாலையில் உலா வந்த யானை கூட்டம்

Published On 2023-06-03 04:54 GMT   |   Update On 2023-06-03 04:54 GMT
  • ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுபள்ளம் அணை.
  • வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களுக்கு வந்து செல்கிறது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுபள்ளம் அணை. இந்த அணையில் மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் தாகம் தீர்க்கவும், விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் முடிந்தும் ஈரோடு மாவட்டத்தில் வெயில் பொதுமக்களை மட்டும்இன்றி வனவிலங்குகளையும் வாட்டி வதைத்து வருகிறது.

தற்போது கோடை மழை பெய்து ஒரு சில இடங்களில் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் தேங்கி நின்றாலும் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனால் வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களுக்கு வந்து செல்கிறது. இதேபோல் அந்தியூர் அடுத்த வரட்டுபள்ளம் அணையில் உள்ள தண்ணீரை குடிக்க அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் யானைகள், மான்கள், செந்நாய், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீரை குடித்து செல்கின்றது.

இந்த நிலையில் நேற்று மாலை வரட்டுபள்ளம் அணையில் தண்ணீர் தேடி வந்த யானை கூட்டம் தண்ணீரை குடித்துவிட்டு அந்தியூர் அடுத்த பர்கூர்-மைசூர் நெடுஞ்சாலையின் குறுக்கே கூட்டமாக வந்தது. அதனை அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும். கார்களில் வருபவர்களும் வாகனத்தை ஓரமாக நிறுத்தி யானையை செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். யானை கூட்டம் யாரையும் தொந்தரவு செய்யாமல் அப்படியே சாலையை கடந்து அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்றது.

Tags:    

Similar News