உள்ளூர் செய்திகள்

விஜயதசமி விழா கோலாகல கொண்டாட்டம்- கோவில்களில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம்

Published On 2022-10-05 11:35 GMT   |   Update On 2022-10-05 11:35 GMT
  • பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
  • பார்வதிபுரம் வனமாலீஸ்வரர் கோவிலில் அதிக அளவில் குழந்தைகளுடன் பெற்றோர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்:

கல்வி, விளையாட்டு, தொழில் என எதை தொடங்குவதாக இருந்தாலும், அதற்கு நல்ல நாள் பார்த்து செய்வது வழக்கம். ஆனால் இந்த நாளில் செய்தால், அது மிகுந்த வளர்ச்சி அடையும் என கருதப்படும் நாள் தான் விஜயதசமி.

ஆயுத பூஜையின் மறுநாள் வரும் விஜயதசமி நாள், கல்வி கற்பவர்களுக்கும் தொழில் தொடங்குபவர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும். இந்த ஆண்டு இன்று(புதன்கிழமை) விஜய தசமி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நேற்று ஆயுதபூஜை கொண்டாடிய அனைவரும் பூஜையில் வைத்த தொழில் கருவிகள், புத்தகங்கள் போன்றவற்றை விஜயதசமி நாளான இன்று மீண்டும் பூஜை செய்து எடுத்து பயன்படுத்தினர். விஜயதசமி நாளில் எது செய்தாலும் அது பெருகும் என்பது ஐதீகம்.

இதனை கருத்தில் கொண்டே பலரும் தங்கள் குழந்தைகளுக்கு இன்று தாம்பாளத்தில் வைக்கப்பட்ட அரிசி மற்றும் நெல்லில் எழுத்துக்களை எழுத கற்றுக்கொடுப்பது வழக்கம். வித்யாரம்பம் என கருதப்படும் இந்த நிகழ்ச்சி இன்று கோவில்களிலும் வீடுகளிலும் நடைபெற்றது.

இது தவிர இன்று பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதிலும் பெற்றோர் ஆர்வம் காட்டினர். இதனால் அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை நாளான இன்று ஒரு ஆசிரியராவது பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்ட கோவில்களிலும் இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்து கோவில்களிலும் செய்யப்பட்டு இருந்தன. பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். பார்வதிபுரம் வனமாலீஸ்வரர் கோவிலில் அதிக அளவில் குழந்தைகளுடன் பெற்றோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் தங்களது குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு, அர்ச்சகர்களை வைத்து வித்யாம்பர நிகழ்ச்சியை நடத்தினர். தாம்பாளத்தில் வைக்கப்பட்ட அரிசி மற்றும் நெல் மணியில் எழுத்துக்களை குழந்தையின் கையைப் பிடித்து எழுத கற்றுக் கொடுத்தனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதனால் அனைத்து கோவில்களிலும் இன்று காலையிலேயே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளிலும் இன்று மாணவர் சேர்க்கை நடந்தது. பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் பள்ளியில் சேர்த்தனர்.

திருவிதாங்கோடு மன்னர் மர்தாண்டவர்மா ஆட்சி காலத்தில் பத்மனாபபுரம் அரண்மனையில் சிறிது காலம் அரசவை கவிஞராக இருந்த கம்பர், போகும் போது விட்டு சென்ற சரஸ்வதி விக்கிரகத்தை மன்னர் எடுத்து அரண்மனை வளாகத்தில் கோவில் கட்டி வழிபட்டு வந்தார்.

அவ்வாறு பிரசித்தி பெற்ற பத்மநாபபுரம் தேவார கெட்டு சரஸ்வதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ம் தேதி நவராத்திரி விழா துவங்கி 10 வது நாளான இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது,

தேவிக்கு நடந்த சிறப்பு பூஜைக்கு பிறகு குழந்தைகளுக்கு எழுத்தறிவு சொல்லிக் கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி தொடங்கியது. பேராசிரியர்கள் சங்கர நாராயணபிள்ளை, அய்யப்பன், ஆசிரியர் ரெகுராமன் ஆகியோர் குழந்தைகளின் நாவில் தங்க குச்சியாலும், தாம்பாள தட்டில் வைக்கப்பட்டிருந்த தானியத்தில் கைவிரல்களாலும் எழுத்துக்களின் வடிவங்களை எழுதி எழுத்தறிவை சொல்லி கொடுத்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, தேவார கெட்டு சரஸ்வதி அம்மன் கோவில் டிரஸ்ட் தலைவர் பாலன், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News