உள்ளூர் செய்திகள்

கணவன், 2 மகன்களை உதறிவிட்டு கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்த சென்னை பெண் கழுத்து நெரித்து கொலை

Published On 2022-10-18 10:25 GMT   |   Update On 2022-10-18 10:25 GMT
  • கள்ளக்காதல் விவகாரம் நதியாவின் கணவருக்கு தெரிந்ததால் அதனை கண்டித்துள்ளார்.
  • கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2 குழந்தைகளுடன் நதியா வீட்டைவிட்டு வெளியேறினார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த கண்ணக்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 36), லாரி டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரின் மனைவி நதியா (32). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

செல்போன் 'ராங் கால்' மூலம் தங்கராஜிக்கும், நதியாவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து செல்போனில் இருவரும் பேசி வந்தனர். பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. தங்கராஜ், அடிக்கடி சென்னைக்கு சென்று நதியாவை சந்தித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் நதியாவின் கணவருக்கு தெரிந்ததால் அதனை கண்டித்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2 குழந்தைகளுடன் நதியா வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர், தண்டராம்பட்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து நதியாவும், தங்கராஜும் குடும்பம் நடத்தியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு, 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மாங்காடு சென்ற நதியா, குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு, மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்தினம் இரவு தங்கராஜின் சொந்த கிராமத்துக்கு வந்தார்.

கணவர் வேறொரு பெண்ணுடன் வீட்டுக்கு வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கராஜின் மனைவி ரேகா, இருவரையும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்தார். அதைத்தொடர்ந்து தங்கராஜ் மற்றும் நதியா ஆகியோர் பெரியகோலாப்பாடி கிராமத்தில் உள்ள முருகர் கோவில் பகுதிக்கு சென்றனர்.

அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு அழைத்து செல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என நதியா மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த தங்கராஜ், சேலையால் கழுத்தை நெரித்து நதியாவை கொலை செய்தார்.

அப்போது, கிராம மக்கள் அந்த பகுதிக்கு வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர். நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தங்கராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News