உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட சிவக்குமார்

ஏற்காட்டில் வாலிபர் வெட்டிக்கொலை- கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2022-12-11 05:43 GMT   |   Update On 2022-12-11 05:43 GMT
  • மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தீர்த்துக்கட்டினேன்.
  • சிவக்குமார் தொடர்ந்து மனைவி புஷ்பாவிற்கு தொல்லை கொடுத்து வந்தார்.

ஏற்காடு.

சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் கும்மிப்பாடி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). கூலிதொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (51) என்பவருடைய மகன் தங்கராஜ் (35). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பா (வயது 32).

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமாருக்கும், தங்கராஜிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் மற்றும் அவரது தந்தை மாணிக்கம் ஆகியோர் சேர்ந்து சிவக்குமாரை கொடுவாளால் வெட்டினர். மேலும் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.படுகாயம் அடைந்த சிவக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தங்கராஜ், அவரது தந்தை மாணிக்கம் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர்.

இதில் சிவக்குமாரை எதற்காக கொலை செய்தோம் என்பது குறித்து தங்கராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

எனது மனைவி புஷ்பாவுக்கும், சிவக்குமாருக்கும் வேலைக்கு சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி புஷ்பாவிடம் என்னை பற்றியும், எனது குடும்பத்தை பற்றியும் சிவக்குமார் தவறாக பேசி, பொய்களை சொல்லி புஷ்பா மனதில் தவறான எண்ணத்தை விதைத்தார். இதனால் வீட்டில் தினமும் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சிவக்குமார் நல்லவர்போல் நடிக்கிறார். அவரை நம்பாதே, அவர் சொல்வதை கேட்காதே என நாங்கள் பலமுறை அறிவுரை கூறினோம்.

ஆனால், சிவக்குமார் தொடர்ந்து எனது மனைவி புஷ்பாவிற்கு தொல்லை கொடுத்து வந்தார். எனது மனைவி நல்லவள். தொடர்ந்து ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டு எனது மனைவியின் மனதை மாற்றினார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இதை அறிந்த நான், எனது மனைவியையும், சிவக்குமாரையும் கண்டித்தேன். மேலும் சிவக்குமாரிடம் எனது மனைவியுடன் உள்ள தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு எச்சரித்தேன். ஆனால் சிவக்குமார் கேட்கவில்லை.

இதனால் நானும், எனது தந்தை மாணிக்கமும் சேர்ந்து, சிவக்குமாரை வெட்டிக் கொன்றோம். போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க தலைமறைவாக இருந்தோம். ஆனால் எங்களை போலீசார் பிடித்துவிட்டனர்.

இவ்வாறு தங்கராஜ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

கைதான தங்கராஜ், மாணிக்கம் ஆகிய இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News