சென்னை கோயம்பேடு, சேலம் தேவூரில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 2 புதிய கிளைகள் திறப்பு
- மெர்க்கன்டைல் வங்கியின் 510-வது கிளை சேலம் மாவட்டம் தேவூரில் அமைக்கப்பட்டு உள்ளது.
- சென்னை கோயம்பேட்டில் மெர்க்கன்டைல் வங்கியின் 511-வது கிளை திறக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்கு சந்தையில், தனது பங்கை பட்டியலிட்டதை தொடர்ந்து, இந்தியா முழுவதும் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வங்கி 509 கிளைகளுடன் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் புதிதாக 2 வங்கி கிளைகள் நேற்று திறக்கப்பட்டு உள்ளன. அதன்படி 510-வது கிளையானது சேலம் மாவட்டம் தேவூரில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிளை அலுவலகத்தை தேவூர் பேரூராட்சி தலைவர் என்.தங்கவேல் திறந்து வைத்தார். 511-வது கிளை சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இதை கோயம்பேடு மொத்த காய்கனி, பூ மற்றும் உணவு தானியங்கள் சந்தைகள் தலைவர் டி.ராஜசேகரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் வங்கி உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறும் போது, 'பங்குசந்தையில் பட்டியலிட்ட பிறகு, வங்கியானது நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக தமிழகத்தில் 510, 511-வது புதிய வங்கி கிளைகளை திறந்து உள்ளோம். இன்னும் அதிக கிளைகளை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டு உள்ளோம். இந்த கிளைகள் தொடக்க விழாவின் மகிழ்ச்சியை வங்கியின் அனைத்து உடமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.