தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 409 மி.மீ. மழை பதிவு
- தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
- புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
மாலை 4 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கி சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது.
நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. மேலும் இடி- மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சேவப்பநாயக்கன்வாரி வடகரையில் 12-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. தகவல் அறிந்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ஆணையர் சரவணக்குமார், மேயர் சண்.ராமநாதன்மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கலெக்டர் உத்தரவுப்படி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.
தொடர்ந்து இடைவிடாது பெய்த மழையால் தஞ்சையில் எங்கு பார்த்தாலும் வெள்ள க்காடாக காட்சியளித்தது. சாலைகளில் தண்ணீர் ெபரும ளவில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே சென்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த கனமழைக்கு ஒரு கூரைவீடு பகுதி அளவில் சேதமடைந்தது. 2 கால்நடைகள் இறந்தன.
இதேப்போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 409.90 மி.மீ. மழை பதிவாகியது.
அதிகபட்சமாக தஞ்சையில் 177.50 மி.மீ. பெய்தது.இன்று காலை 9 மணி வரை தஞ்சையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
தொடர்ந்து நேற்று போல் இன்றும் கனமழை பெய்வதற்கான அறிகுறி தென்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடள் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ. வருமாறு:-
தஞ்சாவூர்-177.50, நெய்வாச ல்தென்பாதி-72.60, வல்லம்-40, குருங்குளம்-34.60, கீழணை-28, அய்யம்பேட்டை-16, பூதலூர்-10.80.