கத்தி முனையில் டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு
- ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை
சிவகங்கையை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). இவர் கோவையில் தங்கி காந்திபுரம் 7-வது வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை ராஜ்குமார் பாரில் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ராஜ்குமாரிடம் மதுபாட்டில் தருமாறு கேட்டனர். அதற்கு அவர் கடை திறக்கவில்லை. 12 மணிக்கு பிறகு வந்து வாங்குமாறு தெரிவித்துள்ளார். இதில் அவர்களு க்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ராஜ்குமாரை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து ராஜ்குமார் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் பார் ஊழியர் ராஜ்குமாரை தாக்கி பணம் பறித்தது ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த தொழிலாளி மோசஸ் (28), ரத்தினபுரி வ.உ.சி வீதியை சேர்ந்த மெக்கானிக் தீபக் (20) மற்றும் ரத்தினபுரி பட்டேல் வீதியை சேர்ந்த பூபதி (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 3 பேர் மீதும் கோவை போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. அவர்கள் அந்த பகுதியில் ரவுடிகளாக சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.