சாலை விபத்தில் தலை நசுங்கி வாலிபர் சாவு
- காண்ட்ராக்டர் மற்றும் வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பிரேத பரிசோதனைக்காக உடலை சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வழுதலைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 25) கொத்தனார்.
இவர் வழுதலைகுடியில் இருந்து வடகால் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.
எடமணல் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே பாலம் கட்டுவதற்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லியில் வழுக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுரேந்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விபத்தில் உயிரிழந்த சுரேந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது அங்கு திரண்ட சுரேந்திரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்துக்கு காரணமான கட்டுமான பணி காண்ட்ராக்டர் மற்றும் வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் அந்த சாலையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து எடமணல் பகுதியில் இருந்து புறவழிச் சாலை பணிக்காக மண் ஏற்றிச் சென்ற லாரி தான் விபத்தை ஏற்படுத்தியது என்பதை கண்டறிந்து லாரி ஓட்டுநர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் கூறினர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
அதன் பின்னர் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.