உள்ளூர் செய்திகள்

சாரட் வண்டி, டிராக்டர்களில் 1008 சீர்வரிசைகளை வழங்கிய தாய்மாமன்கள்

Published On 2024-08-19 07:26 GMT   |   Update On 2024-08-19 07:26 GMT
  • பழங்கால பழக்க வழக்கங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது
  • தென்மாவட்டங்களில் இன்றும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த தம்பதி சபரிபாண்டி-சர்மிளா. இவர்களது மகன் சித்தேஷ். இவரது காதணி விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

காதணி விழாவிற்கு தாய்மாமன்கள் பண மாலை, டிரம்ஸ், சரவெடிகள், சாரட் வண்டி மற்றும் பண்டையகால வழக்கப்படி விவசாயிகளுக்கு உற்றத் துணைவனாக உள்ள டிராக்டர் வண்டியில் அரிசி மூட்டைகள், பழ வகைகள், வாழைத்தார்கள், சாக்லேட் வகைகள், புதிய ஆடைகள், விளையாட்டு சாமான்கள் 10-க்கும் மேற்பட்ட தாய்மாமனின் சீதனமான ஆட்டு கிடா என 1008 சீர் வரிசைகளைக் கொண்டு வானவேடிக்கைகளுடன் திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

அதேசமயம் தாய்மாமன் சீருக்கு அத்தை மகன்கள் சளைத்தவர்கள் அல்ல என அவர்களும் தப்பாட்டம், ஆட்டுக்கிடா, சீர்வரிசைகள், வானவேடிக்கைகள் என மற்றொருபுறம் சீர் கொண்டு வந்தனர்.

இதனால் தாடிக்கொம்பு கிராமமே சீர்வரிசை வண்டிகளின் அணிவகுப்பாக காட்சியளித்தது. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் கண்டு மெய்சிலிர்த்தனர்.

மேலும் விழாவின் நாயகன் சித்தேஷ் தாய் மாமன்களின் பணமாலை மற்றும் சாக்லேட் மாலை, ரோஸ் மாலை, ரோஸ் இதழ் மாலை, தாழம்பூ மாலை, தாமரைப்பூ மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகளால் குளிர்விக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போதைய நாகரீக காலங்களில் வீட்டு விசேஷங்கள் என்பது குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து சடங்கு சம்பிரதாயமாக மாறிவிட்டது. ஆனால் பாரம்பரியத்தை மறக்காமல் ஒருசிலர் மட்டுமே அதனை கடைபிடித்து வருகின்றனர்.

குறிப்பாக தென்மாவட்டங்களில் இதற்கு இன்றும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உறவுகள் கூடுவதோடு, நமது பழங்கால பழக்க வழக்கங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது என்றனர். 

Tags:    

Similar News