தஞ்சை சிவகங்கை பூங்கா 3 மாதத்திற்குள் திறக்கப்படும்- மேயர் பேட்டி
- நடைபாதை அமைத்தல் என்பது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றன.
- மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மட்டுமில்லாமல் பயனுள்ள இடமாக சிவகங்கை பூங்கா திகழும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூரில் புகழ்பெற்ற சிவகங்கை பூங்காவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் தொடங்கியது.
தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன.
இந்த நிலையில் சிவகங்கை பூங்காவில் நடைபெறும் பணிகளை இன்று மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது :-
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா பாரம்பரியமிக்கது. தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் தொடங்கின. இதில் தமிழ் அன்னை செயற்கை நீரூற்று புதுப்பித்தல், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அமைத்தல், மான்கள் இருந்த இடத்தில் சுற்று சுவர், நடைபாதை அமைத்தல் என்பது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றன.
இன்னும் தாவரவியல் பூங்கா அமைக்கப்படவில்லை. இதேபோல் சேர்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடைந்து விடும்.
அனைத்து பணிகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன. பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் சிவகங்கை பூங்கா மாறி உள்ளது.
அதிகபட்சமாக இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் சிவகங்கை பூங்கா திறக்கப்படும். அதன் பிறகு மக்களுக்கு பொழுதுபோக்கும் இடமாக மட்டுமில்லாமல் பயனுள்ள இடமாக சிவகங்கை பூங்கா திகழும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் கோபால், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.