உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த வார்டு உறுப்பினர்கள்.

அஞ்சாங்கட்டளை பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்-கலெக்டரிடம் வார்டு உறுப்பினர்கள் மனு அளித்தனர்

Published On 2023-09-27 09:46 GMT   |   Update On 2023-09-27 09:46 GMT
  • அஞ்சாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக முப்புடாதி என்பவர் பதவி வகித்து வருகிறார்.
  • ஊராட்சி தலைவரின் கணவர் பெரியசாமி ஊராட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் தலையீடு செய்து வருகிறார்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் அஞ்சாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக முப்புடாதி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் மீது பல்வேறு புகார்களை கூறி தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அஞ்சாங்கட்டளை வார்டு உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர்.

அதில், அஞ்சாங்கட்டளை கிராம ஊராட்சியில் பொது மக்களிடம் இருந்து குடிநீர் இணைப்பு பணிகளுக்காக வசூலிக்கப்பட்ட தொகை சுமார் ரூ.85 ஆயிரத்தை ஊராட்சி கணக்கில் செலுத்தாமல் பஞ்சாயத்து தலைவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை வார்டு உறுப்பி னர்களுக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு தனக்கு ஆதாயம் கிடைக்கும் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறார்.

வார்டு உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாயத்து துணைத்தலைவரிடம் கலந்து ஆலோசிக்காமல் அவர்களது ஒப்புதல் இல்லாமல் தீர்மானங்களை நிறைவேற்றி அரசின் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தனது சொந்த மகளின் கணவர் ஆறுமுகம் என்பவரது பெயரில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தனக்கு நெருக்கமான ஒருவரை 100 நாட்கள் பணி முடிந்த பின்னரும் தொடர்ந்து பணித்தள பொறுப்பாளராக நியமித்து மற்ற நபர்களுக்கு பணித்தள பொறுப்பாளர் பணி கிடைக்க விடாமல் அடாவடி செய்து வருகிறார். இவர் ஊராட்சி தலைவராக பதவியேற்ற நாள்முதல் இதுநாள் வரையில் அவரது கணவர் பெரியசாமி என்பவர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளை மேற்பார்வை செய்வதோடு மட்டுமில்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் தலையீடும் செய்து வருகிறார்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து இனி ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு செய்யக்கூடாது என எச்சரித்து உத்தரவு பிறப்பித்தும் அதை மதிக்காமல் இன்றளவும் செயல்பட்டு வருகிறார். ஊராட்சி தலைவரும் தனது அதிகாரத்தை மீறி இதனை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-ன் படி, கட்டாய கடமைகளை செய்யாமல் இருத்தல், நிதி முறைகேடுகளில் ஈடுபடுதல் போன்ற காரணங்களுக்காக அஞ்சாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

Tags:    

Similar News