கோவில்பட்டியில் மகனால் தாக்கப்பட்ட முதியவர் சாவு- கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
- ஜெயக்குமார் நள்ளிரவு நேரத்தில் இரும்பு கம்பியால் தனது தந்தை சுப்பையாவின் தலையில் சரமாரியாக அடித்து தாக்கினார்.
- சத்தம் கேட்டு குடும்பத்தினர் அங்கு ஓடி வந்து படுகாயம் அடைந்த சுப்பையாவை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கீழ காலனி தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 75). இவரது மகன் ஜெயக்குமார் அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்வார் என கூறப்படுகிறது. இதனை சுப்பையா கண்டித்து வந்துள்ளார்.
கடந்த 14-ந் தேதி இரவு ஜெயக்குமார் தெருவில் வைத்து தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு சென்ற சுப்பையா, ஜெயக்குமாரை கடுமையாக கண்டித்து அனுப்பினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் நள்ளிரவு நேரத்தில் இரும்பு கம்பியால் தனது தந்தை என்றும் பாராமல் சுப்பையாவின் தலையில் சரமாரியாக அடித்து தாக்கினார்.
இதனால் சுப்பையா அலறி துடித்தார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் அங்கு ஓடி வந்து படுகாயம் அடைந்த சுப்பையாவை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்று சுப்பையா இறந்ததால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.