உள்ளூர் செய்திகள்

பழுதான நிலையில் காணப்படும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை படத்தில் காணலாம்.

பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் காட்சி பொருளாய் காணப்படும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்-சீரமைக்க பயணிகள் கோரிக்கை

Published On 2023-11-17 08:42 GMT   |   Update On 2023-11-17 08:42 GMT
  • பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
  • குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதாகி குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது.

தென்காசி:

பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்திற்கு ஏராளமான கிராம பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மட்டும் இன்றி பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய காய்கறி சந்தைக்கு உள்ளூர், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதியில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள், விவசாயிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

சுத்திகரிப்பு எந்திரம்

இந்நிலையில் பஸ் நிலையத்தில் புதிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி என அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக பழுதாகி குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது. இலவச கழிப்பிட கட்டிடம் பழுது பார்க்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டு அதுவும் மூடப்பட்டு அருகில் இருக்கும் கட்டண கழிப்பிடம் செல்லும் நிலையில் அதுவும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருகிறது.

மழைக்காலங்களில் பஸ் நிலையத்தினுள் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிப்பதோடு குப்பைகள் அகற்றப்படாமலும், மதுக்குடிப்போரின் கூடாரமாகவும் பஸ் நிலையம் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் எழுந்துள்ளது.

பயணிகள் கோரிக்கை

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் புகார் செய்தும், அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தி அங்கு குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News