உள்ளூர் செய்திகள்

ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம்

Published On 2024-07-22 05:42 GMT   |   Update On 2024-07-22 05:42 GMT
  • மானூர் பகுதியில் பதுங்கி இருந்த அவரை நேற்று மாலை கைது செய்தனர்.
  • காவலர்கள் 2 பேரும், தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலை கொழுந்துபுரத்தை அடுத்த மணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சுரேஷ் (வயது 21).

இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் அடிதடியில் ஈடுபட்டதாகவும், ஒரு பெண்ணிடம் பிரச்சனையில் ஈடுபட்டதாகவும் பாளை தாலுகா போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மானூர் பகுதியில் பதுங்கி இருந்த அவரை நேற்று மாலை கைது செய்தனர்.

பின்னர் இரவில் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி உத்தரவின்பேரில் முதல்நிலை காவலர் வீரமணி, பெண் காவலர் ஆஷிகா ஆகியோர் சுரேசை ஒரு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.

ஆட்டோ நெல்லை-மதுரை நான்குவழிச்சாலையில் கக்கன் நகர் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென சுரேஷ் ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து தப்பி ஓடினார். உடனே காவலர்கள் அவரை பின்தொடர்ந்து துரத்தி சென்ற நிலையில், அப்பகுதியில் உள்ள இருள் சூழ்ந்த பகுதி வழியாக சுரேஷ் தப்பிச்சென்றார்.

இதையடுத்து காவலர்கள் 2 பேரும், தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் தாலுகா போலீசாரும், தனிப்படையினரும் தப்பியோடிய சுரேசை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News