பாப்பிரெட்டிபட்டிக்கு போக்குவரத்து வசதி கூட இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
- பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பேருந்துகள் கூட குறைவாகவே இயக்கப்படுகின்றன.
- அறுவை சிகிச்சையுடன் கூடிய அவசர கால மருத்துவமனையை இப்பகுதியில் அமைக்க வேண்டும் .
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் பாப்பிரெட்டி சட்டமன்றத் தொகுதியும் ஒன்று.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், கடத்தூர் போன்ற பேரூராட்சிகளும், 19 கிராம ஊராட்சிகளும் உள்ளன.
அன்றாட தேவைக்காக சேலம் மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் பேரூராட்சியில் தங்கள் அன்றாட தேவைக்கான அடிப்படை வசதிகளுக்கு வந்து செல்லும் பகுதியாகவும் இருந்து வருகிறது.
ஒரு லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேல் கொண்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி 2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பு மூலமாக உருவாக்கப்பட்டது.
பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்த உள்ள இப்பகுதி மக்கள், சிறுதானியங்கள், நெல், மரவள்ளி, கரும்பு, கிழங்கு, வாழை, பாக்கு ,புளி, கடலை, வெற்றிலை, பூ போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு நீர் ஆதாரமாக வாணியார் நீர்த்தேக்கமும், நிலத்தடி நீர், ஆழ்துளை கிணறுகள், பாசன கிணறுகள் பயன்படுகின்றன.
மேலும் இந்த தொகுதியில் உள்ள மக்கள் கூலி தொழிலாளிகளாக பெங்களூரு, கோவை ,சென்னை போன்ற பகுதிகளுக்கு சென்று வருவாய் ஈட்டி வருகின்றனர்.
தொகுதி தலைநகரமாக பாப்பிரெட்டிப்பட்டி இருந்தாலும் வளர்ச்சி என்பது மந்த கதியில் உள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பேருந்துகள் கூட குறைவாகவே இயக்கப்படுகின்றன.
சேலம், சென்னை, கோவை போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாமியாபுரம் கூட்டு ரோடு வழியாக 100-க்கணக்கில் சென்றாலும் , பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதில்லை.
இதனால் இப்பகுதி மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமென்றால் சாமியாபுரம் கூட்ரோடு சென்று பேருந்து மூலம் செல்லும் நிலை நீடிக்கிறது. பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி ,கடத்தூர் போன்ற பேரூராட்சிகள் இருந்தாலும் கூட தரமான மருத்துவ வசதியுடைய மருத்துவமணை இல்லாததால் இப்பகுதி பொதுமக்கள் சாலை விபத்துக்கள், அவசரகால மருத்துவ சிகிச்சைக்கு சுமார் 50 கிலோமீட்டர் உள்ள சேலம், தருமபுரி சென்று சிகிச்சை பெறும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் உயிர் இழப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது.
எனவே அறுவை சிகிச்சையுடன் கூடிய அவசர கால மருத்துவமனையை இப்பகுதியில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் சுற்றுலாத்தலமான ஏற்காடு மலையில் உள்ள 30-க்கு மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அன்றாட தேவை, மருத்துவ வசதி,கூலி வேலைக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பிற்காகவும் பொம்மிடி , பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளுக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. ஆனால் ஏற்காட்டிற்கு பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி போன்ற பகுதியில் இருந்து தார் சாலை வசதி இருந்தும் பேருந்து வசதி இல்லை.
பேரூந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் 30 கிலோமீட்டரில் ஏற்காடு சென்ற அடையலாம்.
இந்த தொகுதி விவசாய மக்களுக்கு, விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டும் வகையில் பதப்படுத்தும் கிடங்குகள் ஏற்படுத்திக் கொடுத்தால் பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயரும் எனவும், வெளி மாவட்டங்களுக்கு சிறந்த முறையில் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.