கோவை தொழில் அதிபர் வீட்டில் தங்க கட்டி கொள்ளை-வேலைக்கார பெண்ணின் மகனும் கைது
- பொன்முருகன் வீட்டிலிருந்து ரூ.12.40 லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்க கட்டிகள் திருடு போனது.
- சவுந்தரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 50 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது 46). தொழில் அதிபரான இவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த ரூ.12.40 லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்க கட்டிகள் திருடு போனது. இது குறித்து அவர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்க கட்டிகளை திருடிய அவரது வீட்டில் வேலை பார்த்த ஒண்டிப்புதூர் முத்துசாமி செட்டி வீதியை சேர்ந்த சிவராமன் என்பவரது மனைவி ஜோதி(47) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 93 கிராம் எடையிலான தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட ஜோதியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
முன்னதாக மீதமுள்ள தங்கத்தை மீட்பது குறித்து போலீசார் ஜோதியிடம் நடத்திய விசாரணையில், அது அவரது மகன் சவுந்தர்(27) என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று போலீசார் தலைமறைவாக இருந்த சவுந்தரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 50 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட சவுந்தரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.