தொண்டாமுத்தூர் அருகே பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள்
- தட்டிக்கேட்ட கணவரை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினர்.
- இது தொடர்பாக போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
வடவள்ளி
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் 35 வயது முன்னாள் ராணுவ வீரர்.
இவர் தற்போது வடவள்ளியில் உள்ள தனியார் ஓட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டார்.
நேற்று இரவு முன்னாள் ராணுவ வீரரின் மனைவி, அவரது வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் வீட்டின் அருகே வந்ததும், அங்கு நின்றிருந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவியை பார்த்து ஆபாசமான வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் தனது மனைவியிடம் வாலிபர்கள் தகராறு செய்வதை பார்த்து ஓடி வந்து, வாலிபர்களிடம் பேசினார்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து அவரிடமும் தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினர். இதில் அவருக்கு கழுத்து, முகத்தில் காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த இளம்பெண் தனது கணவரை காப்பாற்ற சென்ற போது, இளம்பெண்ணையும் தாக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 3 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் குளத்து பாளையம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த கண்ணதாசன்(20), வடவள்ளி பொம்மனம்பாளையம் பால சபரிஸ்(22), வடவள்ளி சிறுவாணி சாலை கமலேஷ்(27) என்பதும், போதையில் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் அவர்கள் மீது 4 பிரிவில் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.