உள்ளூர் செய்திகள்
தேனி நிதிநிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட மேலும் பலர் குற்றப்பிரிவில் புகார்
- நிதிநிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் குற்றப்பிரிவு போலீசில் ரூ. 4.5 கோடி முதலீடு செய்ததாக புகார் அளித்தனர்.
- தனிப்படை அமைத்து விசாரிக்க மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
தேனி :
திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் எம்.பி.ஏ. பட்டதாரி முத்துச்சாமி கோவையை தலைமையிடமாக கொண்ட யு.டி.ஐ. நிதிநிறுவனம் நடத்தினார். இதற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில், பெங்களூரில் கிளைகள் உள்ளன. வத்தலக்குண்டுவை சேர்ந்த ஆனந்த் தேனி கிளை மேலாளராக உள்ளார்.
இந்நிறுவனத்தில் கம்பத்தைச் சேர்ந்த நபர், அவரின் நண்பர்கள் இணைந்து 1.10 கோடி முதலீடு செய்தனர். இரு மாதங்கள் லாப தொகையை வழங்கிவிட்டு பின்னர் அலுவலகத்தை பூட்டி உரிமையாளர் மாயமானார்.
கம்பம் சத்தியமூர்த்தி புகாரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முத்துசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாநிலம் முழுவதும் 800 பேர் ரூ.17 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் குற்றப்பிரிவு போலீசில் ரூ. 4.5 கோடி முதலீடு செய்ததாக புகார் அளித்தனர்.எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்ரே, டி.எஸ்.பி.சுந்தர ராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சீமை ராஜ், சவுந்திரபாண்டியன், பிச்சைப்பாண்டியன், ராமலட்சுமி, சரவணன் மேற்பார்வையில் தனி ப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.