தியாகதுருகம் பகுதி தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை
- தியாகதுருகம் பகுதி தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்யப்பட்டனர்.
- யூரியாவை வாங்கி தங்களது பயிர்களுக்கு பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சுமார் 5000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் நெல், கரும்பு, மணிலா, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து பராமரித்து வருகின்றனர். பயிர் செய்துள்ள விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுகின்றனர். இவ்வாறு பயிர் கடன் பெரும் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் பயிர்களுக்கு தேவையான அளவு உரம் மற்றும் ரொக்கம் ஆகியவை கடனாக வழங்கப்படுகிறது.
அதன்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று உரம் வாங்கும் விவசாயிகளிடம் ஒருசில கூட்டுறவு சங்கங்களில் டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ளஸ் ஆகிய உரங்களை மட்டுமே இருப்பு உள்ளது எனவும், கடந்த ஒருமாத காலமாக யூரியா இருப்பு இல்லை என கூறுகின்றனர். எனவே விவசாயிகள் தனியார் கடைகளில் யூரியா வாங்கும் அவல நிலை உள்ளது. இதனால் தியாகதுருகம் பகுதியில் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா வாங்க செல்லும்போது வியாபாரிகள் டி.ஏ.பி.,காம்ளஸ் ஆகிய உரங்களை எடுத்தால் மட்டுமே யூரியா மட்டும் வழங்க முடியும் எனவும் கூடுதலாக திரவ யூரியாவும் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
மேலும் ரூ. 266 க்கு விற்பனை செய்ய வேண்டிய யூரியா முட்டை ரூ.350 முதல் 400 வரை விற்பனை செய்வதாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு யூரியாவை வாங்கி தங்களது பயிர்களுக்கு பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதேபோல் கடந்த மாதம் யூரியா கூடுதல் விலைக்கு விற்க்கப்படுவது குறித்து வேளாண்மை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதன்படி தியாகதுருகம் வேளாண்மை அதிகாரிகள் உரக்கடைகள் ஆய்வு செய்தனர்.ஆனால் வியாபாரிகள் தொடர்ந்து யூரியாவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது . எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்து யூரியா கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். . மேலும் தியாகதுருகம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.