100 நாள் வேலை திட்ட பெண்கள் அரசு பஸ்சை சிறைப்பிடித்து மறியல்
- ஆபாசமாக பேசியவரை கைது செய்ய வலியுறுத்தல்
- போலீசார் பேச்சு வார்த்தை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்கின்றனர்.
அதன்படி இன்று காலை 100 நாள் வேலை திட்ட பெண்கள் வழக்கம் போல் அத்திகுப்பம் ஏரியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த தி.மு.க. பிரமுகர் சாமு என்பவர், பெண்களை வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்து தகராறில் ஈடுபட்டார்.
இதனை தட்டி கேட்ட பெண்களை அவர் ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் வேலை திட்ட பெண்கள், காலை 10 மணி அளவில் வேலையை புறக்கணித்து திருப்பத்தூரில் இருந்து பொம்மிக்குப்பம் செல்லும் சாலைக்கு வந்தனர்.
அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறப்பிடித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.
இருப்பினும் அவர்கள், ஆபாசமாக பேசிய தி.மு.க. பிரமுகரை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.