உள்ளூர் செய்திகள்

வாக்காளர் பட்டியலில் 4 முறை பெயர் சேர்க்க வாய்ப்பு

Published On 2023-11-06 08:06 GMT   |   Update On 2023-11-06 08:06 GMT
  • கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடந்தது

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர்,திருப்பத்தூர்,ஜோலார்பேட்டை 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல்,திருத்தம் உள்ளிட்ட முகாம் 2 நாட்கள் நடந்தது.

வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் நாடு சிறுதொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் மதுமதி மற்றும் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் அனைத்து வாக்கு சாவடி மையங்களில் நடைபெறும் முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

புதியதாக பெயர்களை சேர்க்க முகாமிற்கு வந்த முதல் இளம் வாக்காளர்களை வரவேற்று அவர்களுக்கு நாற்காலிகள் போடும்படி கூறி அவர்களை அமரவைத்து கவுரவபடுத்தி பெயர் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்து கூறி பெயர்களை சேர்த்தார். இது இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதுமதி கூறியதாவது:-

முன்பு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே சேர்க்க முடிந்தது.

ஆனால் தற்போது இளம் வக்காளர்கள், விடுபட்ட வாக்காளர்கள் ஜனவரி,ஏப்ரல், ஜூலை,அக்டோபர் என வருடத்தில் 4 முறை தங்கள் பெயர்களை சேர்த்து கொள்ளலாம். மாவட்டம் முழுவதும் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல்,திருத்தம் உள்ளிட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் புதிய இளம் வாக்காளர்களை சேர்க்க கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள இளம் வாக்காளர்களை சேர்க்க பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேர்க்கபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சப் கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன்,நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News