திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
- ரூ.3 கோடியில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.
- கோவில் வளாகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் பிரசித்தி பெற்ற அருணஜடேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பெரிய நாயகி அம்பாள் அருணஜடேஸ்வரர் அருள்பாலிக்கிறார்கள்.
இந்த கோவில் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் கடந்த 2003-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.3 கோடியில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி திருப்பணிகள் தொடங்கியது.
கடந்த 6 மாதங்களில் திருப்பணிகள் நிறைவு பெற்று 2 ராஜகோபுரங்கள் மற்றும் 10 விமானங்களில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
50 செப்புக் கலசங்களும் வைக்கப்பட்டன.
பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கோவில் வளாகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டது.
அதில் 59-யாக குண்டங்களும், 25 வேதிகைகள் அமைக்கப்பட்டு, 80 சிவாச்சாரியார்கள் மூலம் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகள் நடந்தன.முன்னதாக, கடந்த 5-ந் தேதி தேரடி விநாயகர், திருவீதி விநாயகர், ஊருடையப்பர், வீரியம்மன், விஸ்வநாதர் ஆகிய பரிவார கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நேற்று அருணஜடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக மகா பூர்ணாஹூதியுடன் கடம் புறப்பட்டு, காலை 9.30 மணிக்கு கோபுரம், விமானங்களுக்கு குடமுழுக்கும், 10.30 மணிக்கு மூலவர்களுக்கு அபிஷேகமும் நடைபெ ற்றன.
விழாவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் முத்துக்குமாரசாமி தம்பிரான், மதுரை ஆதீனம்ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், கூனம்பட்டி ஆதீனம், காசி மடத்து இளவரசு சபாபதி தம்பிரான் சாமிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் சிராப் கந்தசாமிபிள்ளை, பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், துணைத் தலைவர் கலைவாணி சப்பாணி, கலைச் செல்வன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.