திருப்பூர் காந்திநகர் 80 அடி ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்
- 27 கடைகள் அதிரடியாக இடிக்கப்பட்டது.
- கடையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் மற்றும் சாக்கடை கால்வாயை மூடி கட்டப்பட்டுள்ள கடைகள் ஆகியவற்றை அகற்ற மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இன்று காலை திருப்பூர் காந்தி நகர் 80 அடி ரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை உதவி கமிஷனர் சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் ஹரி மற்றும் அதிகாரிகள் மூலம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
அந்தப் பகுதியில் சாக்கடை கால்வாய் மற்றும் ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 27 கடைகள் அதிரடியாக இடிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சிலர் கடையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.