பல்லடத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம்-2023ஐ திரும்ப பெற வேண்டும்.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பரமசிவம்,லோகநாதன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023ஐ திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றிய தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிய 100 ஹெக்டேர் நிலங்கள் வரை, நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள் உட்பட தனியாருக்கு தாரைவார்க்க வழிவகுக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம்-2023ஐ திரும்ப பெற வேண்டும்.
ஒன்றிய அரசு எந்த ஆய்வும் செய்யாமல் ரேஷன் கடைகளிலும், ஊட்டச்சத்து மையங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை விளக்கி திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர். குமார், பல்லடம் ஒன்றிய செயலாளர் வை.பழனிசாமி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் கொளந்தசாமி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பரமசிவம் ஆகியோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பரமசிவம்,லோகநாதன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.