உடுமலை அருகே வலுவிழக்கும் பி.ஏ.பி.,கால்வாய் பாலம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- வாகனங்கள் ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ரோட்டில் அதிக அளவு செல்கின்றன.
- பாலத்தின் மீதுள்ள ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
உடுமலை :
உடுமலை அருகே தளியில் இருந்து எரிசனம்பட்டி வழியாக தேவனூர்புதூர் வரை செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது.திருமூர்த்திமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் வாகனங்கள், ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ரோட்டில் அதிக அளவு செல்கின்றன.
இந்த ரோட்டில் தீபாலபட்டி அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது. இந்த கால்வாய் மீது கட்டப்பட்ட பாலம் ,தொடர் பயன்பாடு, நீண்ட காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாதது உள்ளிட்ட காரணங்களால் வலுவிழந்து வருகிறது.
பாலத்தின் மீதுள்ள ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அருகிலுள்ள குடிநீர் குழாய் உடைப்பில் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி அப்பகுதியில் தேங்குவது பாலத்தின் உறுதித்தன்மையை பாதிக்கிறது.இவ்வாறு படிப்படியாக வலுவிழந்து வரும் பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டுனர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் கூறுகையில், தளி- எரிசனம்பட்டி ரோட்டில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே பி.ஏ.பி., பாலத்தை புதுப்பிக்க வேண்டும். உடனடி நடவடிக்கையாக ஓடுதளத்தை சீரமைக்காவது நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.