உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

உடுமலை உழவர் சந்தையை விரிவாக்கம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

Published On 2023-11-03 11:07 GMT   |   Update On 2023-11-03 11:07 GMT
  • உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
  • சந்தையை விரிவாக்கம் செய்து கடைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை உள்ளது. சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நாள்தோறும் புத்தம் புதியதாக காய்கறிகள் கிடைப்பதால் உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

இதன் காரணமாக உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை சீரான முறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 7 லட்சத்து 28 ஆயிரத்து 225 கிலோ காய்கறிகளும், 90 ஆயிரத்து 920 கிலோ பழ வகைகளும் ஆக மொத்தம் 8 லட்சத்து 19 ஆயிரத்து 145 கிலோ வரத்து வந்துள்ளது. அதன்படி ரூபாய் 3 கோடியே 24 லட்சத்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகி உள்ளது.

சந்தைக்கு 2 ஆயிரத்து 274 விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்துள்ளனர். அதை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 3 பொதுமக்கள் வாங்கி சென்று உள்ளனர். காய்கறிகள், பழங்கள் தரமாக கிடைப்பதால் உழவர் சந்தைக்கு வருகை தருகின்ற பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் மேலும் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்து கடைகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தி மக்களின் நெரிசலை தவிர்க்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News