உடுமலை தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உதவி மையம்
- தகுதியுடைய பெண்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.
- மேல்முறையீடு செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது
உடுமலை :
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 15 -ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதைத் தொடர்ந்து தகுதியுடைய பெண்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் தகுதி இருந்தும் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.மேலும் இதற்கென இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டது.அதன்படி நேற்று உடுமலை தாலுகா அலுவலகத்தில் முகாம் அமைக்கப்பட்டது.அப்போது உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் கலந்து கொண்டு பொதுமக்களின் விண்ணப்பத்தின் நிலையை ஆய்வு செய்தார்.முன்னதாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.அதன்படி ஒவ்வொருவரையும் வரிசையாக அழைத்து சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது மேல்முறையீடு செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது.இதற்கு அரசு சார்பில் கட்டணம் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த முகமானது 30 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது பொதுமக்கள் ஆதார்கார்டு,குடும்ப அட்டையை கொண்டு வந்து சரி பார்த்துக் கொள்ளலாம் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.முதல் நாளான நேற்று 150 விண்ணப்பதாரர்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. முகாமில் உடுமலை தாசில்தார் ப.சுந்தரம் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.