கோவில் நிலங்களை மீட்டு கற்கள் நடும் பணி தீவிரம்
- மயில்ரங்கத்தில் 490 ஆண்டுகள் பழமையான வைத்தியநாதேஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது.
- நிலங்களைக் கண்டறிந்து அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவில் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்களை மீட்டு எல்லைக் கற்கள் நடும் பணியை அறநிலையத் துறை புதன்கிழமை தொடங்கியது. வெள்ளக்கோவிலை அடுத்த மயில்ரங்கத்தில் 490 ஆண்டுகள் பழமையான வைத்தியநாதேஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 520 ஏக்கா் நிலங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அரசு உத்தரவுப்படி இவற்றை மீட்க, நிலங்களைக் கண்டறிந்து அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை நில அளவையாளா் ராகவேந்திரன், செயல்அலுவலா் சு. இராமநாதன், திருக்கோயில் எழுத்தா் சிவகுமாா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் முதல்கட்டமாக வெள்ளக்கோவில் கிராமம் கணபதிபாளையம், சுப்பிரமணியக்கவு ண்டன்வலசு கிராமங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த 50 ஏக்கா் நிலங்களை மீட்டு அந்த இடத்தில் எல்லைக் கற்களை நட்டுள்ளனா்.
இதேபோல கோயிலுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் விரைவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்."