உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு சுகாதார சான்றிதழ் அவசியம் - வட்டார மருத்துவ அலுவலர் தகவல்

Published On 2023-10-12 06:06 GMT   |   Update On 2023-10-12 06:06 GMT
  • தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் படி புதியதாக கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் சுகாதார சான்றிதழ் அவசியம் பெற வேண்டும்.
  • தமிழக அரசு உத்தரவின்படி உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து சுகாதார சான்றிதழ் பெற வேண்டும்.

திருப்பூர்:

வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையிடம் இருந்து குடியேற்ற சான்றிதழ் பெறுவது அவசியம் என வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் படி புதியதாக கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் சுகாதார சான்றிதழ் அவசியம் பெற வேண்டும். அவ்வாறு சுகாதார சான்றிதழ் பெற்ற கட்டிடங்களுக்கு மட்டுமே வீட்டின் குடிநீர் வசதி மற்றும் மின் இணைப்பு, சொத்து வரி விதிப்புக்கான அனுமதி சான்றிதழ் பெற முடியும். இவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் நடைமுறையில் உள்ள சட்டம் ஆகும்.

புதிய கட்டிடங்களில் முறையற்ற வகையில் கழிவுநீர் தேக்கம், கழிவு நீர் வெளியேற்றம், போதுமான குடிநீர் வசதி இல்லாதது, கழிவு நீர் பொருட்களை தேக்கி வைத்து முறையாக அப்புறப்படுத்தாதது, சுகாதார முறைப்படி கழிவுகளை அப்புறப்படுத்தாமல் இருப்பது போன்றவற்றால் அருகில் வசிப்பவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது மற்றும் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு உத்தரவின்படி உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து சுகாதார சான்றிதழ் பெற வேண்டும்.

சான்றிதழ் பெறுவதற்கான மாதிரி விண்ணப்பம் அந்தந்த ஊராட்சி அமைப்புகளிடம் இருக்கும் எனவும் கட்டுவதற்கு முன்பே அந்த விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய சுகாதார அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு முன்பும் மற்றும் கட்டியதற்கு பின்பும் ஆய்வு மேற்கொள்ளுவர். இதற்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். அதன் பின்னரே குடிநீர் இணைப்பு, சொத்து வரி விதிப்பு, மின் இணைப்பு நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News