காதலியை மண்எண்ணை ஊற்றி எரித்த வாலிபருக்கு ஆயுள் சிறை
- கடந்த 13-3-2019 அன்று மதியம் 12 மணி அளவில் லட்சுமியின் கருவை கலைக்குமாறு கவுதம் நிர்ப்பந்தம் செய்துள்ளார்
- குற்றம் சாட்டப்பட்ட கவுதமுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.2500 அபராதமும விதிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பக்கம் உள்ள ஆத்துப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் கவுதம் (வயது 27). இவர், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த லட்சுமி (வயது 21) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. பின்னர் இரண்டு பேரும் திருப்பூர் அருகே உள்ள பொங்குபாளையம் கிராமம், காளம்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். அப்போது லட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-3-2019 அன்று மதியம் 12 மணி அளவில் லட்சுமியின் கருவை கலைக்குமாறு கவுதம் நிர்ப்பந்தம் செய்துள்ளார். இதனை லட்சுமி மறுத்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் சண்டை வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த கவுதம், மண்எண்ணையை எடுத்து லட்சுமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.பின்னர் அவர் இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கவுதமை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. திருப்பூர் மகிளா அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.பாலு வழக்கை விசாரணை செய்தார். இதில் குற்றம் சாட்டப்பட்ட கவுதமுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.2500 அபராதமும விதிக்கப்பட்டது. இதை கட்டத்தவறினால் மேலும் 6 மாத கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும், மேலும் மற்ெறாரு பிரிவில், ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.