வணிக வரித்துறை அதிகாரிகள் வாகன தணிக்கை - இ-வே பில் கட்டாயம் வைத்திருக்க வேண்டுகோள்
- 10-க்கும் மேற்பட்ட ஜாப்ஒர்க் நிறுவனங்களை கடந்தே ஆடை தயாரிப்பு பூர்த்தியாகிறது.
- திருப்பூரில் வணிக வரித்துறை அமலாக்க பிரிவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:
ஜாப் ஒர்க் நிறுவனங்கள், இ-வே பில் உட்பட உரிய ஆவணங்களை தவறாமல் வைத்திருக்க வேண்டும்.ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வாகனங்களில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொண்டுசெல்லும்போது, இ-வே பில் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், நிட்டிங், டையிங், ரைசிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, பவர்டேபிள் என பல்வேறுவகை ஜாப்ஒர்க் நிறுவனங்கள் உள்ளன.
10-க்கும் மேற்பட்ட ஜாப்ஒர்க் நிறுவனங்களை கடந்தே ஆடை தயாரிப்பு பூர்த்தியாகிறது.கடந்த சில நாட்களாக திருப்பூரில் வணிக வரித்துறை அமலாக்க அதிகாரிகள் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பின்னலாடை சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களில் உரிய ரசீதுகள் உள்ளனவா, இ-வே பில் உள்ளதா என ஆய்வு செய்கின்றனர். ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்லும் சரக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) செயற்குழு உறுப்பினர் நடராஜ் கூறியதாவது:-
திருப்பூரில் வணிக வரித்துறை அமலாக்க பிரிவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடை உற்பத்தி துறையினரை சந்தேக கண்கொண்டே அதிகாரிகள் பார்க்கின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லும் பின்னலாடை சரக்குகளை பிடித்து அபராதம் விதிக்கின்றனர்.பின்னலாடைகளை விற்பனைக்காக அனுப்பும்போது மட்டுமின்றி தயாரிப்புக்காக ஜாப்ஒர்க் நிறுவனங்கள் கொண்டுசெல்லும்போதும் வாகனங்களில் இ-வே பில், டெலிவெரி சலான் உள்ளிட்டவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆடைகள் விற்பனைக்காக எடுத்துச்செல்லப்படலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் ஜாப்ஒர்க் நிறுவன வாகனங்களை மடக்கி தணிக்கை செய்கின்றனர்.எனவே பவர்டேபிள் நிறுவனத்தினர் உஷாராக செயல்பட வேண்டும். துணி கட்டுக்கள் எடுத்துச்செல்லும்போதும் ஆடை தயாரித்து உற்பத்தி நிறுவனங்களிடம் வழங்க கொண்டுசெல்லும்போதும் கட்டாயம் இ-வே பில் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.