யார் என்ன செய்தாலும் சனாதன தர்மம் தலைமுறை தலைமுறையாக தொடரும் - தென்தமிழக மாநில அமைப்பாளர் பேச்சு
- அவினாசி திருப்புக்கொளியூர் வாக்சர் மடாலய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- கார்மேகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
திருப்பூர்:
திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயதசமி அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் ஜில்லா ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்) சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பூர் நடராஜன் தியேட்டர் அருகே ஆலங்காடு பகுதியில் தொடங்கியது. அணிவகுப்பை அவினாசி திருப்புக்கொளியூர் வாக்சர் மடாலய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அணிவகுப்பு ஊர்வலம் கருவம்பாளையம் மேற்கு பிள்ளையார் கோவில், மருக்காடு வீதி, கே.வி.ஆர். நகர் நால்ரோடு வழியாக சென்று செல்லம் நகர் பிரிவில் முடிவடைந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு திருப்பூர் சிவில் என்ஜினீயர் அசோசியேசன் மற்றும் திருப்பூர் பில்டர்ஸ் அசோசியேசன் சங்க முன்னாள் தலைவர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் கார்மேகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தென்தமிழகம் மாநில அமைப்பாளர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் ,விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்ட இயக்கம் தான் இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம். சனாதன தர்மம் பற்றி சிலர் தவறான கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் அவ்வாறு இல்லை. யார் என்ன செய்தாலும் சனாதன தர்மம் தலைமுறை தலைமுறையாக தொடரும்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது யாரையோ எதிர்ப்பதற்காகவோ, வெறுப்பதற்காகவோ, நாட்டை விட்டு விரட்டுவதற்காகவோ தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அது சாதி, மத, மொழி வேறுபாட்டால் பிரிந்து கிடக்கும் இந்து சமுதாய மக்களை ஒன்றிணைக்க தொடங்கப்பட்ட சங்கம் என்றார். இதில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொண்டனர்.