கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் 13-ந்தேதி ஆர்ப்பாட்டம்
- தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 105.90 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கு உயர்த்த வேண்டும்.
திருப்பூர் :
தேங்காய் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சியில்வருகிற 13ந் தேதி நடக்கிறது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் கூறியதாவது:-
தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 105.90 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கு உயர்த்த வேண்டும். தமிழக அரசு அனைத்து தென்னை விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விவசாயிகளிடம் இருந்து தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவும், சத்துணவு திட்டத்தில் சமையலுக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க, கள் இறக்க அனுமதிக்க வேண்டும். தற்போது ஜூலை 31ந் தேதி வரை தேங்காய் கொள்முதலுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.விவசாய சங்கங்களின் கோரிக்கையை அடுத்து, ஆண்டு முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என வேளாண்மை துறை செயலாளர் உறுதியளித்தார். ஆனால் இதுவரை இது குறித்து எவ்வித அரசாணையும் வெளியாகவில்லை.எனவே உடனடியாக காலநீடிப்பு வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.
தென்னையை தோட்டக்கலைத்துறைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.வருகிற 13-ந்தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்து வருகிறோம் என்றனர்.