உள்ளூர் செய்திகள்

நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற காட்சி.

கறிக்கோழி வளர்ப்பிற்கு கோடைகால ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

Published On 2023-06-15 07:20 GMT   |   Update On 2023-06-15 07:20 GMT
  • கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் இயங்கி வருகிறது.
  • கறிக்கோழி வளர்ப்புக்கு கூடுதல் செலவாகுவதால் கறிக்கோழி வளர்ப்போருக்கு கூலியை உயர்த்த வேண்டும்.

பல்லடம் :

பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த குழுவானது கறிக்கோழி இறைச்சி நுகர்வை அடிப்படையாக கொண்டு தினமும் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து அறிவித்து வருகிறது. இதனை அடிப்படையாக கொண்டு தமிழகம், கேரளா, ஆந்திரா,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கறிக்கோழி விற்பனை விலை இருக்கும்.

இதற்கிடையே கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கோழி குஞ்சுகளை 42 நாட்கள் வளர்க்க ஒரு கிலோவிற்கு ரூ.6 முதல் ரூ.9 வரை வளர்ப்பு கூலி வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. இந்தநிலையில் பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் அரிகிருஷ்ணன், கௌரவத் தலைவர் ஓவியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் சிவசாமி, முத்துசாமி, சரவணன், உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர். கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்க பொருளார் பழனிச்சாமியை சந்தித்து மின் கட்டண உயர்வு, தொழிலாளர் சம்பளம் அதிகரிப்பு, பராமரிப்பு செலவு ஆகியவற்றால் கறிக்கோழி வளர்ப்புக்கு கூடுதல் செலவாகுவதால் கறிக்கோழி வளர்ப்போருக்கு கூலியை உயர்த்த வேண்டும். கறிக்கோழி வளர்ப்பிற்கு கோடைகால ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்க பொருளாளர் பழனிச்சாமி கூறுகையில்:- கறிக்கோழி ஒருங்கிணைப்புக்கு குழு தலைவர் மற்றும் செயலாளர் வெளியூரில் இருப்பதால் அவர்கள் வந்தவுடன் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உங்களது கோரிக்கைகளை பரிசீலித்து இன்னும் 1 வார காலத்திற்குள் பதில் கூறுவதாக தெரிவித்தார்.இதனை கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News