உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அரசு பள்ளிகளில் செயல்பாட்டுக்கு வந்த மறுசீரமைப்பு மேலாண்மைக்குழு

Published On 2022-07-11 07:24 GMT   |   Update On 2022-07-11 07:24 GMT
  • தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.
  • திருப்பூர் மாவட்டத்தில் 908 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 260 நடுநிலைப்பள்ளிகளில் கடந்த வாரம் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மை குழுக்கள் செயல்பாட்டை துவக்கியுள்ளன.

திருப்பூர் :

கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி அனைத்து குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில், மேலாண்மை குழுக்கள் செயல்பாடின்றி உள்ளது.உள்கட்டமைப்பு வசதி உட்பட எல்லா வகையிலும் அரசு பள்ளிகளை தன்னிறைவு பெறச்செய்ய தமிழகம் முழுவதும்அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 908 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,260 நடுநிலைப்பள்ளிகளில் கடந்த வாரம் மறு சீரமைப்பு செய்யப்பட்டமேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டை துவக்கியுள்ளன. மாவட்டம் முழுவதும் 89 அரசு, நகராட்சி உயர் நிலைப்பள்ளிகள், 76 உயர் நிலைப்பள்ளிகள் எனமொத்தம் 165 பள்ளிகளில் மேலாண்மை குழு பிரதிநிதிகள் பதவியேற்றனர்.இதனால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,333 அரசு, நகராட்சி பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மை குழுக்கள் செயல்பாட்டை துவக்கியுள்ளன.

அவ்வகையில் திருப்பூர் பழனியம்மாள் பள்ளியில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மை குழு கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தலைமைவகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக ராஜேஸ்வரி, துணை தலைவராக விமலா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி பிரதிநிதி, பெற்றோர் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நஞ்சப்பா, கே.எஸ்.சி., ஜெய்வாபாய் பள்ளிகளிலும், மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாரம் ஒருமுறையாவது பள்ளியை பார்வையிட வேண்டும். மாதம் ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். பள்ளியின் தற்போதைய நிலை, தேவையான வசதிகள் குறித்து ஆலோசிக்கவேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசு, தன்னார்வலர்கள், தங்களது சுய பங்களிப்பு மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News