உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கிராம ஊராட்சிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் தீவிரம்

Published On 2022-10-27 08:37 GMT   |   Update On 2022-10-27 08:37 GMT
  • 2024க்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

 உடுமலை :

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வரும், 2024க்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

கிராமப்புற வீடுகளில் முழுமையாக செயல்படும் குடிநீர் குழாய் இணைப்பை 62 சதவீத வீடுகள் பெற்றுள்ளன என மத்திய நீர்வளத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 799 வீடுகள் உள்ளன.கடந்த ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 77 கிராம ஊராட்சிகளில் 25 ஆயிரம் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது.நடப்பாண்டு ஜல் ஜீவன் திட்டம் மட்டுமின்றி 14 மற்றும் 15வது நிதிக்குழு மானிய நிதி திட்டம், குடிநீர் வடிகால் வாரிய திட்டம் மற்றும் மாநில அரசின் பிற திட்டங்கள் என அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி ஊக்குவிக்கப்படுகிறது.

இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:-

ஜல் ஜீவன் திட்டம் மற்றும் பிற ஒருங்கிணைந்த மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 729 வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சில புதிய திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது.மீதமுள்ள 77 ஆயிரத்து 70 வீடுகளுக்கு வரும் ஆண்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 2024ல் முடிக்கப்பட வேண்டிய இலக்கு 2023ல் முடிக்கப்பட்டு விடும் வகையில் செயலாற்றி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News