வகுப்பறைகள் இல்லாமல் திறந்தவெளியில் பாடம் படிக்கும் மலைவாழ் மாணவர்கள்
- அடிப்படை கல்வி கற்க வேண்டுமென மலைப்பகுதி மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
- பள்ளி கட்டடம் தொலைதூரத்தில் இருப்பதால் அதை பயன்படுத்த முடியாமல் குழந்தைகள் வீட்டு திண்ணைகளில் அமர்ந்து பாடம் படிக்கின்றனர்.
உடுமலை
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் 18 மலை வாழ் கிராமங்கள் உள்ளன. கிராமத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்விக்காக குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, தளிஞ்சி, கோடந்தூரில் அரசு துவக்க பள்ளி தலா ஒன்று உள்ளது.
தளிஞ்சி மற்றும் கோடந்தூர் பகுதிகளில் பள்ளி கட்டமைப்புகள் முறையாக உள்ளது. குருமலையில் குடியிருப்பிலிருந்து பள்ளி கட்டடம் தொலைதூரத்தில் இருப்பதால் அதை பயன்படுத்த முடியாமல் குழந்தைகள் வீட்டு திண்ணைகளில் அமர்ந்து பாடம் படிக்கின்றனர். குழிப்பட்டியில் பாதுகாப்பு இல்லாத இடிந்து விழும் நிலையில் உள்ள வகுப்பறையில் அமர்ந்து அச்சத்துடன் படிக்க வேண்டிய நிலை நீண்ட காலமாக உள்ளது.
வனப்பகுதியில் உள்ள குழந்தைகளில் கல்வி மற்றும் எதிர்காலத்துக்கான அஸ்திவாரமாக கருதப்படும், துவக்கப்பள்ளிகளின் அவல நிலையை மாற்ற வேண்டும் என அப்பகுதியினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
கடந்த கல்வியாண்டில் குருமலை, குழிப்பட்டியில் புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கான அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இருப்பினும் கட்டுமான பணிகள் துவக்கப்படவில்லை. மலைப்பகுதி பள்ளிகளில் இப்போது மாணவர்களின் எண்ணிக்கையும் சராசரியாக உயர்ந்து வருவதால் கட்டடம் அடிப்படையாகவும் அவசிய தேவையாகவும் உள்ளது. அடிப்படை கல்வி கற்க வேண்டுமென மலைப்பகுதி மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அதற்கான வசதிகளை மேம்படுத்துவதில் அரசுத்துறைகள் அலட்சியமாக செயல்படுகிறது.
புதிய கல்வியாண்டில் தரமுள்ள, பாதுகாப்பான சூழலில் தங்களின் குழந்தைகள் படிக்க உள்ளனர் என எதிர்பார்த்து மலைப்பகுதி பெற்றோர் ஏமாற்றத்தில் உள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், குருமலை, குழிப்பட்டி பகுதிகளில் பள்ளி கட்டடம் கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தற்போது மாவடப்பு பகுதிகளிலும் கட்டடம் கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் நிதிஒதுக்கீடு வரவில்லை என்றனர்.