பட்டு புழுக்கள் கூடு கட்டாமல் திடீரென இறப்பதால் உடுமலை விவசாயிகள் அதிர்ச்சி
- 1.65 லட்சம் புழுக்கள் திடீரென இறந்ததால் ரூ.1.75 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.
- புழு வளர்ப்பு மனைக்கு 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை:
தமிழகத்தில் 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு 25,259 புழு வளர்ப்பு மனைகளில் நாள் தோறும் 10 ஆயிரம் டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.பட்டு வளர்ச்சித்துறை சார்பில், கோவை, ஈரோடு, தாளவாடி ஆகிய வித்தகங்களில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டு இளம்புழு வளர்ப்பு மனைகளுக்கு வழங்கப்படுகிறது.
இங்கு 7 நாட்கள் புழு வளர்க்கப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது. பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 22 நாட்கள் பராமரிக்கப்பட்டு பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. இத்துறையில் அரசு சார்பில் உற்பத்தி செய்து வழங்கப்படும் முட்டைகள் தரமற்றதாக உள்ளதால் கூடு கட்டும் பருவத்தில் கூடு கட்டாமல் புழுக்கள் திடீரென இறந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த வாரம் உடுமலை கண்ணமநாயக்கனூர் விவசாயி யோகேஸ்வரனுக்கு சொந்தமான புழு வளர்ப்பு மனையில், ஒரு முட்டை தொகுதிக்கு 550 புழுக்கள் வீதம் 300 முட்டை தொகுதியில் 1.65 லட்சம் புழுக்கள் திடீரென இறந்ததால் ரூ.1.75 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.
மேலும் இரு புழு வளர்ப்பு மனைகளில், புழுக்கள் திடீரென இறந்தன. ஆண்டியகவுண்டனூர் பெரிசனம்பட்டியை சேர்ந்த, விவசாயி லோகநாதன் புழு வளர்ப்பு மனையில் கூடு கட்டும் பருவத்தில் இருந்த புழுக்கள் இறந்தன. இங்கு 150 முட்டை தொகுதிகளில் 82 ஆயிரம் புழுக்கள் வரை இறந்துள்ளன.
எலையமுத்தூர் செல்வராஜ் புழு வளர்ப்பு மனையில், 100 முட்டை தொகுதிகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் 55 ஆயிரம் புழுக்கள் வரை இறந்தன. இதனால் 3 லட்சம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்கத்தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-
தரமற்ற பட்டு புழு முட்டை வினியோகம், இளம்புழு வளர்ப்பு மனை கண்காணிப்பில் அதிகாரிகள் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் வீழ்ச்சியடைந்து வருகிறது.ஏறத்தாழ 50 சதவீதம் விவசாயிகள் தற்போது இத்தொழிலை விட்டுச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தரமற்ற முட்டை உற்பத்தி செய்து வினியோகம் செய்வதால் புழுக்கள் கூடு கட்டாமல் திடீரென இறந்து வருகின்றன.
புழு வளர்ப்பு மனைக்கு 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து புழு வளர்ப்பின் போது திடீரென இறப்பதால் ஒவ்வொரு மனைகளிலும் ரூ. 1.50 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை ஒரு பேட்ச் வளர்க்கும் போதும் நஷ்டம் ஏற்படுகிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடந்த சில மாதங்களில் பாதித்துள்ளனர். தரமான முட்டை வினியோகிக்கவும், இளம் புழு வளர்ப்பு மனைகளை கண்காணித்து விவசாயிகளுக்கு தரமான புழு வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவும், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டு விவசாயிகளிடமிருந்து ரூ.290 வசூலிக்கப்பட்டது. 5 மாதமாகியும் இத்தொகையும் உரிய இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் செலுத்தி காப்பீடு செய்யவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.