பள்ளி மேலாண்மை கூட்ட தகவல்கள் செயிலியில் பதிவேற்றம்
- 1,333 அரசு, நகராட்சிப்பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மைக்குழுக்கள் செயல்பாட்டை துவக்கி உள்ளன.
- 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.
திருப்பூர் :
கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி அனைத்து குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் அரசுப்பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மொத்தம் 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 1,333 அரசு, நகராட்சிப்பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மைக்குழுக்கள் செயல்பாட்டை துவக்கி உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இக்குழு உறுப்பினர்கள் 20 பேர் எமிஸ் வலைதளத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஓராசிரியர் பள்ளியாக இருந்தால் 19 பேருக்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் எத்தனை பேர் நியமிக்கிறீர்களோ, அத்தனை நபர்களின் விபரங்களையும் எமிஸ் வலைதளத்தில் பதிவிட வேண்டும்.கூட்டம் சார்ந்த செயல்பாடுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சார்ந்த புகைப்படங்களை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
திருப்பூர் மாவட்ட பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறுகையில், மாதம்தோறும் நடக்கும் கூட்டத்தில் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் வருகைப்பதிவு, வருகை தராத மாணவர்கள் மற்றும் அதற்கான காரணம், கடந்த 6 மாதங்களில் நடந்த கற்றல் முன்னேற்றம், அடுத்த 2 மாதத்திற்கான கற்பித்தல் செயல்திட்டம் ஆகியவை ஆய்வு செய்யப்படும் என்றனர்.