திருவிழா களை கட்டிய நேரத்தில் 4 பேர் பலியானதால் சோகத்தில் மூழ்கிய கிராமம்
- போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை
- படுகாயம் அடைந்தவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த வசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வடிவேலு (வயது 32).
அதே பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (35),ஆனந்தன் (45), சிவராமன் (32), பிரகாஷ் (37). இவர்கள் 5 பேரும் ஊர் திருவிழாவை முன்னிட்டு பட்டாசு வாங்குவதற்காக சேத்துப்பட்டுக்கு காரில் வந்தனர்.
பட்டாசுகள் வாங்கிக் கொண்டு ஊருக்கு திரும்பினர். சேத்துப்பட்டு தேவிகாபுரம் இடையே கிழக்கு மேடு பகுதியில் மாலை 6:30 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது போளூரில் இருந்து சென்னைக்கு சென்ற அரசு பஸ் மீது திடீரென கார் மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் இறங்கி நின்றது.
பஸ் மீது மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த வடிவேல், சங்கர், ஆனந்தன், சிவராமன் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
படுகாயம் அடைந்த பிரகாசை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இன்று காலை ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர், ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விபத்து குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் சேத்துப்பட்டு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழா களை கட்டிய நேரத்தில் விபத்தில் 4 பேர் பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.