வெள்ளப்பெருக்கு சீரானதால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
- வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு ‘அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
- குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவி வருகிறது.
தென்காசி:
தமிழகத்திற்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு 'அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் சாரல் மழையினால் குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு சீரானதால் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மாலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தாலும் அருவிகளில் நீர்வரத்து சற்று சீராக தொடங்கியதால் ஒவ்வொரு அருவிகளிலும் படிப்படியாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இன்று காலையில் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்தாலும் குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் காலை முதலே ஆர்வமுடன் அருவிகளில் குளிக்க தொடங்கி உள்ளனர்.
மேலும் அரசு சார்பில் நடத்தப்படும் சாரல் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் இன்று மாலையில் மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் சாரல் திருவிழா நடத் தப்படும் எனகூறப்படுகிறது.