உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை அருகே நெய் அருவியில் தொடரும் சுற்றுலா பயணிகள் மோதல்-போலீசார் பாதுகாப்பில் ஈடுபட கோரிக்கை

Published On 2023-07-31 08:46 GMT   |   Update On 2023-07-31 08:46 GMT
  • குற்றாலத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் சுற்றுலா பயணிகள் குண்டாறு அணைக்கு வந்துவிடுவார்கள்.
  • சில வாலிபர்கள் நடந்து சென்ற பெண்கள் மீது மோதுவதுபோல் காரை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே குண்டாறு அணைக்கட்டு உள்ளது. மாவட்டத்தில் மிகச்சிறிய, 36 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையானது பருவமழை தொடங்கி நன்றாக பெய்தால், சில நாட்களிலேயே நிரம்பி வழியும்.

சீசன் காலங்களில் குற்றாலத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்கு தண்ணீர் குறைவாக விழுந்தாலோ அல்லது பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தாலோ குண்டாறு அணைக்கு வந்துவிடுவார்கள். அவ்வாறு வருபவர்கள் குண்டாறு அணையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்கு விழும் நெய் அருவியில் குளித்து மகிழ்வார்கள்.

இந்தநிலையில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க சென்றனர். அப்போது சில வாலிபர்கள் நடந்து சென்ற பெண்கள் மீது மோதுவதுபோல் காரை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் குளிக்க சென்ற இடத்திலும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் 2 தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அவர்கள் தாக்கிக்கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை அறிந்த செங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த பகுதியில் தனியார் அருவிகள் ஏராளமானவை உள்ளன. அங்கு சென்று குளிக்க, குண்டாறு அணை பகுதியில் இருந்து இயக்கப்படும் தனியார் ஜீப்களில் மட்டுமே செல்ல அனுமதி என்பதால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் கூறுகின்றனர். மேலும் மோதல்கள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே பாதுகாப்புக்கு போலீசாரை நியமிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News